Skip to main content
A- A A+    
Powered by Google TranslateTranslate
BU search

About Bharathiar

Administrative Building
  • 0
Biography

ஆயிரத்து எண்ணூற்று எண்பத்து இரண்டாம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினொன்றாம் நாள் (11-12-1882) பிறந்து ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தொன்றாம் ஆண்டு செப்டம்பர் மாதம் பன்னிரெண்டாம் நாள் (12-09-1921) காலமானவர் மகாகவி பாரதியார். தம் வாழ்நாள் முழுதும் உலக நலனுக்காக எழுத்தால், பேச்சால், செயலால் வாழ்ந்தவர் பாரதியார். அதனால்தான், உலகம் அவரை உலக மகாகவியாகப் போற்றிக் கொண்டாடுகின்றது.

உலகில் எந்தப் படைப்பாளருக்கும் கிடைக்காத பெருமையும் மரியாதையும் மகாகவி பாரதியாருக்குக் கிடைத்துள்ளது.  நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த மண்ணில் தடம் பதித்து வாழ்ந்தவர் பாரதியார். ‘கருவிலே திருவாய்க்கப் பெற்றவர்’ என்று மிகச் சிறந்த ஆளுமைகளைப் பற்றிச் சொல்வார்கள். அந்தப் பட்டியலில் இடம்பெற்றவர் பாரதியார்.

இந்தப் பூவுலகில் பாரதியார் வாழ்ந்த மொத்த நாட்கள் 14,155. பாரதியார் என்னும் மனிதர் தம் வாழ்நாள் முழுதும் உலக சமுதாயத்திற்காக வாழ்ந்தவர். காலமான பின் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறவர். பாரதியாருக்குக் கிடைத்த ஒப்பற்ற மரியாதையாக இதுவே அமைந்துள்ளது.

சுப்பிரமணியன் என்னும் பெயரில் சின்னச்சாமி, லட்சுமி அம்மையார் மகனாக அறியப்பட்ட பாரதியார் தன் பதினொன்றாம் வயதிலேயே பாரதி என்று பாராட்டப்பட்டார். அதன் பின் சிறுவனாக இருந்த பாரதி முதல் மகாகவி பாரதியாக வளர்ச்சியடைந்தது வரையிலான பாரதியாரின் வரலாறு பொன் எழுத்துக்களால் பொறிக்கத்தக்கவை.

கவிஞர், கதையாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், இதழியலாளர், அரசியலாளர், சொற்பொழிவாளர், சமூகச் சீர்திருத்தவாதி, பல்சமய ஒருங்கிணைப்பாளர், தன்னம்பிக்கையாளர், நேர்முக உளவியலாளர், உள்ளிட்டப் பல்வேறு திறன்களுக்குச் சொந்தக்காரர் பாரதியார். மனித உறவுகளைப் பேணுவதில் பாரதியார் தேர்ந்த விற்பன்னராக இருந்திருக்கிறார்.  

பாரதியாரின் வாழ்க்கை வரலாறு அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது. 1882 டிசம்பர் 11-ஆம் நாள் அவரின் பிறப்பால் பெருமை பெற்றது. பெற்றோர் லட்சுமி அம்மையும் சின்னச்சாமியும் மகன் பாரதியால் வரலாற்றில் நீங்கா இடம்பெற்றனர்.

ஐந்து வயதில் தாயார் காலமாக, வள்ளியம்மாள் பாரதியாரின் சிற்றன்னையானார். குறையாத அன்பை பாரதியாருக்கு வழங்கிய சிறப்பு அவரின் சிற்றன்னைக்கு உண்டு. பெற்றோர், பாரதியார், தம்பி விசுவநாதன், தங்கை லட்சுமி என்று அழகான குடும்பம். வசதிக்குக் குறைவில்லை.

தந்தை சின்னச்சாமி எட்டயபுர ஜமீனில் மதிப்புமிக்கவராகத் திகழ்ந்தார். அவர் கல்வி, கேள்விகளில் தேர்ந்தவர். ஒரு பஞ்சாலையை நிறுவி சிறந்த தொழிலதிபராகத் திகழ வேண்டுமென்று கனவு கண்டார். தன் மகன் ஆங்கிலமும் கணிதமும் எந்திரக் கல்வியும் கற்றுப் பெரிய பதவியில் அமர வேண்டும் என்பதும் அவரது கனவு. ஆனால் பாரதியாரின் கனவு வேறாக இருந்தது. தமிழும் கவிதையும் மனிதமும் எளிமையும் ஈரமும் இணைந்தவராக பாரதியார் தம்மைக் கட்டமைத்துக் கொண்டார்.

எட்டயபுரம் ஜமீனில் எல்லோர்க்கும் செல்லப் பிள்ளையாய் இருந்த பாரதியார் தமிழை அமிழ்தாக்கி அனைவர்க்கும் கொடுத்தவர். எட்டயபுரத்தில் ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளியில் படித்தார். பின்பு திருநெல்வேலியில் இந்து கலாசாலையில் மூன்றாண்டுகள் ஐந்தாம் பாரம் வரைபடித்தார். அங்கு பாடங்களைவிடப் பாடல்களில் அதிக ஈடுபாடு செலுத்தினார். அந்தப் பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் காளமேகமாகக் கவி பொழியும் பாரதியின் கவித்துவம் கண்டு வியந்து பாராட்டியிருக்கிறார்கள்.

அக்கால வழக்கப்படி பாரதிக்கு 14 வயது நிறைந்த போது (1897) 7 வயது நிரம்பிய செல்லம்மாவை மணம் முடித்தார்கள். கடையம் செல்லப்பா ஐயரின் மகள் செல்லம்மா அன்பும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் நற்பண்புகளும் பொருந்திய திருமகள். பாரதியார் உலக மகாகவியாகக் கொண்டாடப்படுவதற்கு திருமதி செல்லம்மா பாரதியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

பாரதியாருடைய தந்தையின் தொழிலில் பின்னடைவு ஏற்பட்டது. அவர் தொடங்கிய பஞ்சாலைக்கான எந்திரப் பகுதிகள் அயல்நாட்டிலிருந்து மதுரை வரை வந்தன. ஆனால் அவற்றை எட்டயபுரத்திற்கு எடுத்துவர இயலாத சூழலை அன்றைய ஆங்கிலேய அரசு உருவாக்கியது. அதனால்  பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. கடன் பெருகியது. கையிலிருந்த செல்வம் யாவும் கரைந்தது. இதனால் அவர் நிலை குலைந்தார். உள்ளம் வெதும்பினார். உடல் நலம் கெட்டார். தாங்கொணாத இழப்புகளால் வாழ இயலாமல் மனம் நொந்து குடும்பத்தைத் தவிக்கவிட்டு பாரதியாரின் தந்தை காலமானார்.

எனவே, 15-ஆம் வயதில் பாரதியாரின் கல்வி தடைப்பட்டது. சிற்றன்னையும் தம்பியும் மானாமதுரைக்குச் சென்றார்கள். சின்னச்சாமியின் தாயார் பாகீரதியம்மாள் சில முடிவுகளை எடுத்தார். செல்லம்மா கடையத்தில் அவரது தந்தை வீட்டுக்கு அனுப்பப்பட்டார். பாட்டியும் பாரதியாரும் பாரதி பிறந்து வளர்ந்து படித்துப் புழங்கிய எட்டயபுரம் மண்ணைவிட்டு காசிக்குச் சென்றார்கள். காசியில் பாரதியாரின் அத்தை (சின்னச்சாமியின் சகோதரி) குப்பம்மாள், மாமா கிருஷ்ணசிவன் ஆகியோரின் வீட்டில் தங்கி பாரதியார் தன் வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

உறவுகளின் அன்பை உணர்ந்தவர் பாரதியார். இழப்புகளின் வலியை அறிந்தவர் பாரதியார். இந்த இழப்புகளும் காயங்களும் அவரை மானுடத்தை நோக்கிப் புடம்போடும் காரணிகள் ஆயின. காசியில் அனுமந்தகாட் பகுதியில் அத்தை வாழ்ந்த வீட்டின் பெயர் “சிவமடம்”. அத்தை கணவர் கிருஷ்ணசிவன் சிறந்த சிவ பக்தர். அத்தையின் ஒரு மகனுக்குத் தான் பாரதியின் தங்கை லட்சுமியை மணம் முடித்திருந்தார்கள்.

பழகிய மனிதர்களைவிட்டு, புழங்கிய மண்ணைவிட்டு, அழகுத்தமிழின் துணையோடு அயல்நாடு செல்வதுபோல் காசிக்குச் சென்றார் பாரதியார். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக காசியில் வாழ்ந்தார். பன்மொழிப் புலவராய், விடுதலை வேட்கை கொண்ட வேங்கையாய், பல் சமயப் பொறையுடைய அறிஞராய், தத்துவப் பிழியலான ஞானியாய் பாரதியாரைப் பக்குவப்படுத்திக் கொடுத்த பெருமையில் அவரது காசி வாழ்க்கைக்கு முக்கியப் பங்குண்டு. 

காசியில் மிஷன் காலேஜ், ஜெய நாராயண் காலேஜ் ஆகியவற்றில் கல்வி பயின்றார். அலகாபாத் சர்வ கலாசாலையில் இந்தியும் சமஸ்கிருதமும் கற்றுப் பிரவேசப் பரீட்சையில் தேறினார். உள்ளார்ந்த சிந்தனைகளில் கூடுதல் தெளிவுடன் உள்ளொளி பெருக்கிய காசி வாழ்க்கை பாரதி சகாப்தத்தில் கல்வெட்டில் பொறிக்கத்தக்கது. அங்கேதான் பாரதி அன்னிபெசண்ட் அம்மையாரைச் சந்தித்தார். கிராப்பும் வால்விட்ட தலைப்பாகையும் முறுக்கு மீசையும் எனப் புறத்தோற்றத்தை மாற்றி அமைத்துக் கொண்டார். அங்கு வாழ்ந்தபோதே ‘பெண்கல்வி’ குறித்துச் சொற்பொழிவாற்றினார்.  

காசி இந்து பனாரஸ் கல்லூரி உலக நாடுகளின் மாணவர்கள் வந்து பயிலும் சர்வ கலாசாலையாக மாறவேண்டுமென்று பாரதியார் கனவு கண்டார். அவரது கனவு நனவாகியுள்ளது. இன்று இந்து பனாரஸ் கல்லூரி 25,000 ஏக்கரில் பல்கலைக்கழகமாக உருவாகியுள்ளது.

இங்கிலாந்தில் ஏழாம் எட்வர்டு முடிசூட்டிக் கொண்டதை இந்தியாவில் கர்சன் பிரபு ஒரு விழாவாகக் கொண்டாடினார். அதில் பங்கேற்பதற்காக எட்டயபுர மன்னர் டெல்லி சென்றார். விழா முடிந்து திரும்பும்போது காசிக்கு வந்த மன்னர், பாரதியாரைத் தம்முடன் எட்டயபுரத்திற்கு அழைத்து வந்தார். எட்டயபுரத்தில் பத்திரிகைகள் படித்தல், இலக்கிய விவாதங்களில் பங்கேற்றல் என்பன மட்டுமே பாரதியாரின் பணிகளாயின. இரண்டாண்டுகள் அங்கிருந்த பாரதியார் ஜமீன் பணியில் விருப்பமில்லாமல் மனைவியுடன் மதுரைக்குச் சென்றார்.

மதுரையில் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த பண்டிதர் அரசஞ் சண்முகனாருக்கு உடல்நலமில்லை. விடுப்பில் சென்றார். அவர் விடுப்பில் சென்ற இடைப்பட்ட காலத்தில் (1904 ஆகஸ்டு - நவம்பர் வரை) பாரதியார் சேதுபதி உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் அதே ஆண்டு நவம்பர் நிறைவில் சென்னைக்குச் சென்றார். புகழ்பெற்ற சுதேசமித்திரன் இதழில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். சிறந்த மொழி பெயர்ப்பாளராக, இதழியல் நுட்பங்கள் அறிந்தவராக ஒளி வீசினார். 

தொடர்ந்து இந்தியா, சக்கரவர்த்தினி, பாலபாரதா, விஜயா ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1905 காசி காங்கிரஸ், 1906 கல்கத்தா காங்கிரஸ், 1907 சூரத் காங்கிரஸ் மாநாடுகளில் பிரதிநிதியாகப் பங்கேற்றுச் சிறப்பித்தார். வங்கப் பிரிவினைக்கு எதிரான கூட்டத்தில் பங்கேற்றார். அன்னை நிவேதிதாவைத் தம் குருவாக ஏற்றார். இந்தியாவிற்கு விடுதலை வேண்டிய அரசியல் வாழ்வில் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டார். தம் எழுச்சிமிகு எழுத்துகளால் சிறந்த இதழியலாளராக மிளிர்ந்தார். தம் புரட்சிமிகு கவிதைகளால் விடுதலை உணர்வை வீறுகொண்டு எழச்செய்தார். 

ஆங்கிலேயரின் அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்தது. விடுதலை உணர்வை ஊட்டிய தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். திலகர், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, மித்திரன் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர், இந்தியா ஆசிரியர் சீனிவாசன் எனப் பலரையும் ஆங்கிலேய அரசு சிறையிலடைத்தது. ஆங்கிலேயரை எதிர்க்கும் வலிய ஆயுதம் பாரதியாரிடம் இருப்பதைக் கண்டு கொண்ட நண்பர்கள் அவரை பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழிருந்த புதுச்சேரிக்கு அனுப்பினார்கள்.

பத்தாண்டுக் கால புதுச்சேரி வாழ்க்கையில் பாரதியாரின் படைப்பிலக்கியத் திறன் மேலோங்கி நின்றது. இதழியல் துறையில் புதுமைகளைப் பூக்க வைத்தது. வையத் தலைமை கொள்ளும் கருத்தியல் வலிமையைப் பாரதியாருக்குள் புகுத்தியது. பெண் விடுதலை, மண் விடுதலை, சமூக விடுதலை என்னும் புதிய முழக்கங்களை ஒலிக்கச் செய்தது. மனிதநேயத்தையும் உயிர் நேயத்தையும் எழுத்தாலும் பேச்சாலும் மணம் கமழச் செய்தது.

            1918-ஆம் ஆண்டு புதுச்சேரியிலிருந்து கடலூருக்கு வந்த பாரதியார் ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டார். பின்னர் கடையத்தில் ஓராண்டு வாழ்ந்தார்.  மீண்டும் சென்னை திரும்பி சுதேசமித்திரனில் உதவி ஆசிரியர் பணியை ஏற்றார்.  அங்கு 1921 செப்டம்பர் 11 வரை வாழ்ந்த பாரதியார் செப்டம்பர் 12 அதிகாலை உடல்நலக் குறைவு காரணமாகக் காலத்தோடும்  காற்றோடும் கலந்தார்.

பாரதியாரின் அனைத்துப் படைப்புகளும் காலத்தை வென்று உலக இலக்கியத் தரத்தில் மிளிர்கின்றன. பாரதியாரின் வாழ்க்கை ஓர் ஒப்பற்ற மாமனிதரின் வாழ்வுக்கான அடையாளமாக ஒளிர்கின்றது.