Skip to main content
A- A A+    
Powered by Google TranslateTranslate
BU search
bharati elevation centre
  • 0

Mahakavi Bharathiar

தமிழகம் தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும்

தலைவனை எண்ணித் தவம் கிடக்கையில்

இலகு பாரதி புலவன் தோன்றினான்

 

ஆயிரத்து எண்ணூற்று எண்பத்து இரண்டாம் ஆண்டு டிசம்பர் மாதம் பதினொன்றாம் நாள் (11-12-1882) பிறந்து ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தொன்றாம் ஆண்டு செப்டம்பர் மாதம் பன்னிரெண்டாம் நாள் (12-09-1921) காலமானவர் மகாகவி பாரதியார். தம் வாழ்நாள் முழுதும் உலக நலனுக்காக எழுத்தால், பேச்சால், செயலால் வாழ்ந்தவர் பாரதியார். அதனால்தான், உலகம் அவரை உலக மகாகவியாகப் போற்றிக் கொண்டாடுகின்றது.

உலகில் எந்தப் படைப்பாளருக்கும் கிடைக்காத பெருமையும் மரியாதையும் மகாகவி பாரதியாருக்குக் கிடைத்துள்ளது.  நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இந்த மண்ணில் தடம் பதித்து வாழ்ந்தவர் பாரதியார். ‘கருவிலே திருவாய்க்கப் பெற்றவர்’ என்று மிகச் சிறந்த ஆளுமைகளைப் பற்றிச் சொல்வார்கள். அந்தப் பட்டியலில் இடம்பெற்றவர் பாரதியார்.

இந்தப் பூவுலகில் பாரதியார் வாழ்ந்த மொத்த நாட்கள் 14,155. பாரதியார் என்னும் மனிதர் தம் வாழ்நாள் முழுதும் உலக சமுதாயத்திற்காக வாழ்ந்தவர். காலமான பின் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறவர். பாரதியாருக்குக் கிடைத்த ஒப்பற்ற மரியாதையாக இதுவே அமைந்துள்ளது.

சுப்பிரமணியன் என்னும் பெயரில் சின்னச்சாமி, லட்சுமி அம்மையார் மகனாக அறியப்பட்ட பாரதியார் தன் பதினொன்றாம் வயதிலேயே பாரதி என்று பாராட்டப்பட்டார். அதன் பின் சிறுவனாக இருந்த பாரதி முதல் மகாகவி பாரதியாக வளர்ச்சியடைந்தது வரையிலான பாரதியாரின் வரலாறு பொன் எழுத்துக்களால் பொறிக்கத்தக்கவை.

கவிஞர், கதையாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், இதழியலாளர், அரசியலாளர், சொற்பொழிவாளர், சமூகச் சீர்திருத்தவாதி, பல்சமய ஒருங்கிணைப்பாளர், தன்னம்பிக்கையாளர், நேர்முக உளவியலாளர், உள்ளிட்டப் பல்வேறு திறன்களுக்குச் சொந்தக்காரர் பாரதியார். மனித உறவுகளைப் பேணுவதில் பாரதியார் தேர்ந்த விற்பன்னராக இருந்திருக்கிறார்.  

பாரதியாரின் வாழ்க்கை வரலாறு அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது. 1882 டிசம்பர் 11-ஆம் நாள் அவரின் பிறப்பால் பெருமை பெற்றது. பெற்றோர் லட்சுமி அம்மையும் சின்னச்சாமியும் மகன் பாரதியால் வரலாற்றில் நீங்கா இடம்பெற்றனர்.

ஐந்து வயதில் தாயார் காலமாக, வள்ளியம்மாள் பாரதியாரின் சிற்றன்னையானார். குறையாத அன்பை பாரதியாருக்கு வழங்கிய சிறப்பு அவரின் சிற்றன்னைக்கு உண்டு. பெற்றோர், பாரதியார், தம்பி விசுவநாதன், தங்கை லட்சுமி என்று அழகான குடும்பம். வசதிக்குக் குறைவில்லை.

தந்தை சின்னச்சாமி எட்டயபுர ஜமீனில் மதிப்புமிக்கவராகத் திகழ்ந்தார். அவர் கல்வி, கேள்விகளில் தேர்ந்தவர். ஒரு பஞ்சாலையை நிறுவி சிறந்த தொழிலதிபராகத் திகழ வேண்டுமென்று கனவு கண்டார். தன் மகன் ஆங்கிலமும் கணிதமும் எந்திரக் கல்வியும் கற்றுப் பெரிய பதவியில் அமர வேண்டும் என்பதும் அவரது கனவு. ஆனால் பாரதியாரின் கனவு வேறாக இருந்தது. தமிழும் கவிதையும் மனிதமும் எளிமையும் ஈரமும் இணைந்தவராக பாரதியார் தம்மைக் கட்டமைத்துக் கொண்டார்.

எட்டயபுரம் ஜமீனில் எல்லோர்க்கும் செல்லப் பிள்ளையாய் இருந்த பாரதியார் தமிழை அமிழ்தாக்கி அனைவர்க்கும் கொடுத்தவர். எட்டயபுரத்தில் ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளியில் படித்தார். பின்பு திருநெல்வேலியில் இந்து கலாசாலையில் மூன்றாண்டுகள் ஐந்தாம் பாரம் வரைபடித்தார். அங்கு பாடங்களைவிடப் பாடல்களில் அதிக ஈடுபாடு செலுத்தினார். அந்தப் பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் காளமேகமாகக் கவி பொழியும் பாரதியின் கவித்துவம் கண்டு வியந்து பாராட்டியிருக்கிறார்கள்.

அக்கால வழக்கப்படி பாரதிக்கு 14 வயது நிறைந்த போது (1897) 7 வயது நிரம்பிய செல்லம்மாவை மணம் முடித்தார்கள். கடையம் செல்லப்பா ஐயரின் மகள் செல்லம்மா அன்பும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் நற்பண்புகளும் பொருந்திய திருமகள். பாரதியார் உலக மகாகவியாகக் கொண்டாடப்படுவதற்கு திருமதி செல்லம்மா பாரதியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

பாரதியாருடைய தந்தையின் தொழிலில் பின்னடைவு ஏற்பட்டது. அவர் தொடங்கிய பஞ்சாலைக்கான எந்திரப் பகுதிகள் அயல்நாட்டிலிருந்து மதுரை வரை வந்தன. ஆனால் அவற்றை எட்டயபுரத்திற்கு எடுத்துவர இயலாத சூழலை அன்றைய ஆங்கிலேய அரசு உருவாக்கியது. அதனால்  பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. கடன் பெருகியது. கையிலிருந்த செல்வம் யாவும் கரைந்தது. இதனால் அவர் நிலை குலைந்தார். உள்ளம் வெதும்பினார். உடல் நலம் கெட்டார். தாங்கொணாத இழப்புகளால் வாழ இயலாமல் மனம் நொந்து குடும்பத்தைத் தவிக்கவிட்டு பாரதியாரின் தந்தை காலமானார்.

எனவே, 15-ஆம் வயதில் பாரதியாரின் கல்வி தடைப்பட்டது. சிற்றன்னையும் தம்பியும் மானாமதுரைக்குச் சென்றார்கள். சின்னச்சாமியின் தாயார் பாகீரதியம்மாள் சில முடிவுகளை எடுத்தார். செல்லம்மா கடையத்தில் அவரது தந்தை வீட்டுக்கு அனுப்பப்பட்டார். பாட்டியும் பாரதியாரும் பாரதி பிறந்து வளர்ந்து படித்துப் புழங்கிய எட்டயபுரம் மண்ணைவிட்டு காசிக்குச் சென்றார்கள். காசியில் பாரதியாரின் அத்தை (சின்னச்சாமியின் சகோதரி) குப்பம்மாள், மாமா கிருஷ்ணசிவன் ஆகியோரின் வீட்டில் தங்கி பாரதியார் தன் வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

உறவுகளின் அன்பை உணர்ந்தவர் பாரதியார். இழப்புகளின் வலியை அறிந்தவர் பாரதியார். இந்த இழப்புகளும் காயங்களும் அவரை மானுடத்தை நோக்கிப் புடம்போடும் காரணிகள் ஆயின. காசியில் அனுமந்தகாட் பகுதியில் அத்தை வாழ்ந்த வீட்டின் பெயர் “சிவமடம்”. அத்தை கணவர் கிருஷ்ணசிவன் சிறந்த சிவ பக்தர். அத்தையின் ஒரு மகனுக்குத் தான் பாரதியின் தங்கை லட்சுமியை மணம் முடித்திருந்தார்கள்.

பழகிய மனிதர்களைவிட்டு, புழங்கிய மண்ணைவிட்டு, அழகுத்தமிழின் துணையோடு அயல்நாடு செல்வதுபோல் காசிக்குச் சென்றார் பாரதியார். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக காசியில் வாழ்ந்தார். பன்மொழிப் புலவராய், விடுதலை வேட்கை கொண்ட வேங்கையாய், பல் சமயப் பொறையுடைய அறிஞராய், தத்துவப் பிழியலான ஞானியாய் பாரதியாரைப் பக்குவப்படுத்திக் கொடுத்த பெருமையில் அவரது காசி வாழ்க்கைக்கு முக்கியப் பங்குண்டு. 

காசியில் மிஷன் காலேஜ், ஜெய நாராயண் காலேஜ் ஆகியவற்றில் கல்வி பயின்றார். அலகாபாத் சர்வ கலாசாலையில் இந்தியும் சமஸ்கிருதமும் கற்றுப் பிரவேசப் பரீட்சையில் தேறினார். உள்ளார்ந்த சிந்தனைகளில் கூடுதல் தெளிவுடன் உள்ளொளி பெருக்கிய காசி வாழ்க்கை பாரதி சகாப்தத்தில் கல்வெட்டில் பொறிக்கத்தக்கது. அங்கேதான் பாரதி அன்னிபெசண்ட் அம்மையாரைச் சந்தித்தார். கிராப்பும் வால்விட்ட தலைப்பாகையும் முறுக்கு மீசையும் எனப் புறத்தோற்றத்தை மாற்றி அமைத்துக் கொண்டார். அங்கு வாழ்ந்தபோதே ‘பெண்கல்வி’ குறித்துச் சொற்பொழிவாற்றினார்.  

காசி இந்து பனாரஸ் கல்லூரி உலக நாடுகளின் மாணவர்கள் வந்து பயிலும் சர்வ கலாசாலையாக மாறவேண்டுமென்று பாரதியார் கனவு கண்டார். அவரது கனவு நனவாகியுள்ளது. இன்று இந்து பனாரஸ் கல்லூரி 25,000 ஏக்கரில் பல்கலைக்கழகமாக உருவாகியுள்ளது.

இங்கிலாந்தில் ஏழாம் எட்வர்டு முடிசூட்டிக் கொண்டதை இந்தியாவில் கர்சன் பிரபு ஒரு விழாவாகக் கொண்டாடினார். அதில் பங்கேற்பதற்காக எட்டயபுர மன்னர் டெல்லி சென்றார். விழா முடிந்து திரும்பும்போது காசிக்கு வந்த மன்னர், பாரதியாரைத் தம்முடன் எட்டயபுரத்திற்கு அழைத்து வந்தார். எட்டயபுரத்தில் பத்திரிகைகள் படித்தல், இலக்கிய விவாதங்களில் பங்கேற்றல் என்பன மட்டுமே பாரதியாரின் பணிகளாயின. இரண்டாண்டுகள் அங்கிருந்த பாரதியார் ஜமீன் பணியில் விருப்பமில்லாமல் மனைவியுடன் மதுரைக்குச் சென்றார்.

மதுரையில் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்த பண்டிதர் அரசஞ் சண்முகனாருக்கு உடல்நலமில்லை. விடுப்பில் சென்றார். அவர் விடுப்பில் சென்ற இடைப்பட்ட காலத்தில் (1904 ஆகஸ்டு - நவம்பர் வரை) பாரதியார் சேதுபதி உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் அதே ஆண்டு நவம்பர் நிறைவில் சென்னைக்குச் சென்றார். புகழ்பெற்ற சுதேசமித்திரன் இதழில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். சிறந்த மொழி பெயர்ப்பாளராக, இதழியல் நுட்பங்கள் அறிந்தவராக ஒளி வீசினார். 

தொடர்ந்து இந்தியா, சக்கரவர்த்தினி, பாலபாரதா, விஜயா ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1905 காசி காங்கிரஸ், 1906 கல்கத்தா காங்கிரஸ், 1907 சூரத் காங்கிரஸ் மாநாடுகளில் பிரதிநிதியாகப் பங்கேற்றுச் சிறப்பித்தார். வங்கப் பிரிவினைக்கு எதிரான கூட்டத்தில் பங்கேற்றார். அன்னை நிவேதிதாவைத் தம் குருவாக ஏற்றார். இந்தியாவிற்கு விடுதலை வேண்டிய அரசியல் வாழ்வில் தம்மை ஐக்கியப்படுத்திக் கொண்டார். தம் எழுச்சிமிகு எழுத்துகளால் சிறந்த இதழியலாளராக மிளிர்ந்தார். தம் புரட்சிமிகு கவிதைகளால் விடுதலை உணர்வை வீறுகொண்டு எழச்செய்தார். 

ஆங்கிலேயரின் அடக்குமுறை நாளுக்கு நாள் அதிகரித்தது. விடுதலை உணர்வை ஊட்டிய தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். திலகர், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, மித்திரன் ஆசிரியர் ஜி.சுப்பிரமணிய ஐயர், இந்தியா ஆசிரியர் சீனிவாசன் எனப் பலரையும் ஆங்கிலேய அரசு சிறையிலடைத்தது. ஆங்கிலேயரை எதிர்க்கும் வலிய ஆயுதம் பாரதியாரிடம் இருப்பதைக் கண்டு கொண்ட நண்பர்கள் அவரை பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழிருந்த புதுச்சேரிக்கு அனுப்பினார்கள்.

பத்தாண்டுக் கால புதுச்சேரி வாழ்க்கையில் பாரதியாரின் படைப்பிலக்கியத் திறன் மேலோங்கி நின்றது. இதழியல் துறையில் புதுமைகளைப் பூக்க வைத்தது. வையத் தலைமை கொள்ளும் கருத்தியல் வலிமையைப் பாரதியாருக்குள் புகுத்தியது. பெண் விடுதலை, மண் விடுதலை, சமூக விடுதலை என்னும் புதிய முழக்கங்களை ஒலிக்கச் செய்தது. மனிதநேயத்தையும் உயிர் நேயத்தையும் எழுத்தாலும் பேச்சாலும் மணம் கமழச் செய்தது.

            1918-ஆம் ஆண்டு புதுச்சேரியிலிருந்து கடலூருக்கு வந்த பாரதியார் ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டார். பின்னர் கடையத்தில் ஓராண்டு வாழ்ந்தார்.  மீண்டும் சென்னை திரும்பி சுதேசமித்திரனில் உதவி ஆசிரியர் பணியை ஏற்றார்.  அங்கு 1921 செப்டம்பர் 11 வரை வாழ்ந்த பாரதியார் செப்டம்பர் 12 அதிகாலை உடல்நலக் குறைவு காரணமாகக் காலத்தோடும்  காற்றோடும் கலந்தார்.

பாரதியாரின் அனைத்துப் படைப்புகளும் காலத்தை வென்று உலக இலக்கியத் தரத்தில் மிளிர்கின்றன. பாரதியாரின் வாழ்க்கை ஓர் ஒப்பற்ற மாமனிதரின் வாழ்வுக்கான அடையாளமாக ஒளிர்கின்றது. 

  • உயிர்களிடத்தில் அன்பு வேணும்
  • பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே
  • ஒளிபடைத்த கண்ணினாய் வாவாவா
  • உறுதிகொண்ட நெஞ்சினாய் வாவாவா
  • வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
  • உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்

என்பன போன்ற கவிதையடிகள் பாரதியாரின் கவித்துவ மேன்மைக்குச் சான்றுகளாக அமைகின்றன. 

இந்திய விடுதலை, உலக வரலாறு, மானுடம் குறித்த பாரதியாரின் கட்டுரைகளும் கருத்துச் சித்திரங்களும் அவரைத் தொலைநோக்குப் பார்வை கொண்ட தீர்க்கதரிசியாக அடையாளம் காட்டுகின்றன.

பன்மொழிப் புலமை கொண்ட பாரதியார் எப்போதும் தாய்மொழிப் பயன்பாட்டின் தேவையை வலியுறுத்திப் பேசியவர். அதுபற்றி அவர் எழுதிய சொற்கள் தாய்மொழியை நேசிக்கும் அனைவராலும் இன்றும் உலக அரங்கில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.

ஏழையென்றும் அடிமையென்றும் எவருமில்லை என்று முழங்கிய மகாகவி பாரதியார் தம் சொற்பொழிவுகளிலும் சமத்துவச் சமூகத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகளைத் தொடர்ந்து எடுத்துரைத்துக் கொண்டே இருந்தார். 

  • ஒரு மனிதராக பாரதியார் கடைப்பிடித்த வாழ்வியல் ஒழுகலாறுகள் மிகமிகப் போற்றுதலுக்கு உரியவை. 
  • எழுத்திற்கும் பேச்சுக்கும் தாம் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இடைவெளியில்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர் பாரதியார். 
  • அவர் வாழ்ந்த காலத்தில் அவர் பிறந்த சமூகத்திலும் அவர் வாழ்ந்த சமூகத்திலும் நிலவிய அனைத்து வகை மூட நம்பிக்கைகளை எதிர்த்து ‘எல்லோரும் சமம்’ என்பதை எப்போதும் கடைப்பிடித்தவர் பாரதியார்.
  • எல்லா உயிரும் இன்பம் எய்துக

எல்லா உடலும் நோய் தீர்க

எல்லா உணர்வும் ஒன்றாதல் உணர்க

என்பதைத் தம் அனுபவத்தில் கண்டு தெளிந்து அனைவர்க்கும் உரைத்தவர் பாரதியார்.

  • பசியெனும் பேய்தனை உலகிலிருந்து விரட்டுவதற்கான வழிமுறைகளை உரக்கப் பேசியவர் பாரதியார்.
  • கல்வி, விடுதலை, உரிமை, கடமை, தன்னம்பிக்கை, உழைப்பு, நேர்மை ஆகியவற்றைச் சொந்த வாழ்வில் கடைப்பிடித்தும் பிறருக்கு வலியுறுத்தியும் வாழ்ந்தவர் பாரதியார். 
  • பாரதியார் பிறப்பால் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. தந்தையும் தாய்மாமனும் பல உறவினர்களும் வசதியாக வாழ்ந்தார்கள். அரசரும் செல்வந்தர்களும் நண்பர்களும் பாரதியாருக்குத் தேவையானவற்றை வழங்க எப்போதும் தயாராக இருந்தார்கள். ஆனால் பாரதியாரின் குடும்பமோ மிகமிகப் பெரியது. அதனால் குடும்பத்தார் அனைவரின் தேவைகளையும் அவர்களால் பூர்த்தி செய்ய இயலவில்லை. ஆம்! இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் பாரதியார் தமது குடும்பமாகக் கருதினார்.
  • இதழ்களுக்கு எழுதிய வகையில் அவருக்குப் பெரும் நிதி கிடைத்தது. அதில் பெரும்பகுதியை ஆங்கிலேய அரசு அபகரித்துக் கொண்டது. அதுபோக எஞ்சிய பணத்தில் - பொருளில் பசியால் வாடுபவர்களுக்குத் தம்மிடம் உள்ள அனைத்தையும் கொடுக்கும் வழக்கம் பாரதியாரிடம் இருந்தது. உணவும் பணமும் மட்டுமல்ல., கிழிந்த ஆடையுடன் எளிய மனிதனைக் கண்டுவிட்டால், தாம் உடுத்தியிருக்கும் புதிய வேட்டியைக்கூட அவரிடம் கொடுத்துவிட்டு தலைப்பாகையைக் கழட்டி இடுப்பில் கட்டிக்கொண்டு வீட்டுக்கு வரும் வழக்கம் பாரதியார் வாழ்வில் பலமுறை நடந்திருக்கிறது.
  • அன்பு மகள்கள் தங்கம்மா, சகுந்தலா இருவரும் பாரதியாரின் மேன்மையை உணர்ந்த அன்பின் திருவுருக்களாக வாழ்ந்து பாரதியாருக்குப் பெருமை சேர்த்தார்கள். 
  • பாரதியார் பொருளியல் தேவைகளை நிறைவு செய்து கொள்வதை மட்டும் வாழ்க்கை என்று கருதவில்லை. இயற்கையை, அதன் வளங்களை அவர் எப்போதும் கொண்டாடினார்.
  • மனிதம் நிரம்பிய மனிதர்களின் செயல்களை அவர் பெரிதும் போற்றினார்.  மனிதர்கள் மிகவும் இனியர் என்று முழங்கினார். 
  • சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலின் யானை சற்றே தள்ளிவிட பாரதியாரின் நண்பர் குவளைக்கண்ணன் விரைந்து வந்து பாரதியாரைக் காப்பாற்றினார். அதனால் ஏற்பட்ட காயங்களுக்குச் சிகிச்சை பெற்றுக் குணமடைந்து மீண்டுவந்து விடுதலைக் களத்தில் தொடர்ந்து பணியாற்றினார். சென்னையிலிருந்து பயணம் செய்து ஈரோட்டில் உள்ள கருங்கல் பாளையத்திற்கு வந்து அங்குள்ள நூலகத்தில் மனிதனுக்கு மரணமில்லை என்னும் பொருண்மையில் உரையாற்றினார். 
  • 1921 செப்டம்பர் முதல் வாரத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு பத்திரிகை அலுவலகத்திற்குச் செல்லாமல் வீட்டில் ஓய்வெடுத்தார். வயிற்றுப் போக்கு நோய் ஆட்கொண்டதால் படுத்த படுக்கையானார். மருந்து உண்ண மறுத்தார். செப்டம்பர் 12 அதிகாலை 01.30 மணியளவில் காற்றோடு கலந்து காலமானார். 
  • அன்றைய அரசியல் காலச்சூழல், குடும்பத்தாரின் சடங்கு முறைகள் இவற்றின் காரணமாக பாரதியாரின் இறுதிச்சடங்கு அன்றே நடைபெற்று முடிந்தது. 
  • வாழ்ந்த காலத்தில் பாரதியாரை நேசித்தவர்கள் அதிகம். பாரதியாரின் தமிழை வியந்து கொண்டாடியவர்கள் பலர். சென்னை விக்டோரியா அரங்கத்தில் நடைபெற்ற Cult of the Eternal என்ற (நித்தியத்தின் வழிபாடு) பாரதியாரின் சொற்பொழிவைக் கேட்பதற்கு அந்தக் காலத்திலேயே (02-03-1919) நபர் ஒருவருக்கு ஒரு ரூபாய் நுழைவுக் கட்டணம் விதிக்கப்பட்டும் அந்த அரங்கம் முழுதும் நிரம்பி வழிந்தது என்பது வரலாறு.
  • 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி இன்று வரை தொடர்ந்து இயங்கிவரும் தென்னகத்தின் புகழ்பெற்ற ஆங்கில நாளேடான ‘இந்து’ நாளிதழில் வெளிவந்த பாரதியாரின் கடிதங்களும் கட்டுரைகளும் அவரின் பன்முகத் திறன்களுக்குச் சான்று பகரும் ஒப்பற்ற ஆவணங்கள்.
  • பிறந்த குலத்திற்குரிய சில நெறிமுறைகள் தந்த நெருக்கடிகள், அவரது அரசியல் சமூகச் சீர்திருத்தக் கருத்துக்கள் காரணமாக இணக்கமற்றவர் என்று உறவுகளால் ஒதுக்கப்பட்ட நிலை, ஆங்கிலேயரின் அடக்குமுறை எனப் பல்முனைத் துன்பங்கள் அவருக்கு இருந்தன. ஆனால் எல்லாவற்றையும் புறந்தள்ளி மானுடத்திற்காக உழைத்த தமிழன்னையின் தவப்புதல்வராக பாரதியார் கம்பீரமாகத் தம் வாழ்வை நிறைவு செய்தார். 
  • எத்தனை இடர்கள் சூழ்ந்தபோதிலும் ‘எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா’ என்று பாடும் வல்லமையைப் பெற்றிருந்தார். 
  • பாரதியார் உண்டாக்கிய இலக்கிய மரபு படைப்பிலக்கிய உலகில் தொடர்ந்து வந்து அவருக்குப் பெருமை சேர்க்கின்றது.
  • ஆய்வுலகிலும் ஊடக உலகிலும் பொருத்தமுடைய பேசு பொருளாக பாரதியாரின் வாழ்வியலும் படைப்பியலும் இன்றும் வலம் வருகின்றன.
  • உலகெங்கிலும் பாரதியாருக்குச் சிலைகள் இருக்கின்றன.
  • பாரதியாரின் பெயரில் நகர்கள், வீதிகள், அடுக்ககங்கள், இலக்கிய மன்றங்கள், இல்லங்கள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகம், விருதுகள், விழாக்கள் என்றெல்லாம் பாரதியார் நினைக்கப்படுகிறார்., போற்றப்படுகிறார். 
  • பாரதி என்னும் பெயரை இருபால் குழந்தைகளுக்கும் சூட்டும் பெருமை பாரதியாருக்கு உண்டு.  
  • பாரதியார் காலத்தை வென்று மானுடத்தின் குரலாக, குறியீடாக ஒளி வீசுகிறார்.
  • புவியனைத்தும் போற்றவான் புகழ் படைத்த கவியரசர் என்று பிரான்ஸ் நாட்டுக் கவிஞர்களால் கொண்டாடப்பட்ட மகாகவி பாரதியாரின் முழுமையான வாழ்க்கை வரலாறு இன்னும் எழுதப்படவில்லை என்பது வியப்பான, கசப்பான உண்மை. பாரதியார் பிறந்தநாள் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட பாரதியார் பல்கலைக்கழகம் அவரின் நினைவு நூற்றாண்டில் பாரதியாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை எழுதும் முயற்சியைத் தொடங்கியுள்ளது.
  1. பாரதியார் பல்கலைக்கழகம்

எண்ணிய முடிதல் வேண்டும்  நல்லவே எண்ணல் வேண்டும்

  1. திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்அறிவு வேண்டும் என்னும் பாரதியார் கவிதையடிகளை நாள்தோறும் பல்கலைக்கழக வாழ்த்தாக ஒலிக்கச் செய்து, பயிற்றிப் பலகல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும் என்னும் பாரதியாரின் கல்வி மந்திரத்தைத் தன் கொள்கை மந்திரமாகக் கைக் கொண்டுள்ளது.
  • பாரதியார் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் பெ.காளிராஜ் அவர்கள் காணிநிலம் என்னும் பெயரில் 2,73,000 சதுர அடி நிலப்பரப்பில் பல்கலைக்கழக வளாகத்தில் உலகத் தரத்தில்  மகாகவி பாரதியார் உயராய்வு மையத்தைக் கட்டமைக்கும் பணியை முன்னெடுத்துள்ளார்கள். 
  • திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்ற பாரதியாரின் கருத்தியல் மெய்ப்படும் வகையில் பாரதியார் பல்கலைக்கழகம் மகாகவி பாரதி திருப்பணியைச் செம்மையாகத் திட்டமிட்டுச் செயல்படுத்தி வருகின்றது.